Friday, 21 June 2019

உளவளத்துணையில் உளப்பகுப்பாய்வு அணுகுமுறை

உளப்பகுப்பாய்வு  அணுகுமுறை
  (Psychoanalysis Approach)



  உளவளதுணை என்பது தொழில் வாண்மைமிக்க ஓர் துறையாகும். அன்றாட  வாழ்வில் மனிதன் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் மனித ஆளுமையை விருத்தி செய்வதுடன்  குறித்த நபராகவே பிரச்சினையை தீர்க்கும் வகையில் அவரின் திறன்களை வெளிக்கொணர உதவுவதும், தளம்பல் நிலையில் உள்ள  உளநிலையை நடுநிலைப்படுத்தலும் "உளவளத்துணை" எனப்படுகிறது. அந்தவகையில் உளவளத்துணையின் அணுகுமுறையில் ஒன்றாக உளப்பகுப்பாய்வு அணுகுமுறை காணப்படுகிறது.

இவ்வணுகுமுறை சிக்மாண்ட் பிரைட் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இவர் ஒரு உள நோய் வைத்தியர் ஆவர். இவரே உளவியலில்  விஞ்ஞான ரீதியன அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர் ஆவர். இவர் 1909இல் கிளாக் பல்கலைக்கழகத்தில் நடத்திய விரிவுரையின்போது இதனை அறிமுகம் செய்தார். பிரைட் உளப்பகுப்பாய்வை "நனவிலியின் அறிவியல்" என்றே கூறுகிறார். இவர் மனதை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார். அவற்றை பின்வருமாறு கூறலாம். 

நனவு மனம்  (Conscious) : 
    இது "வெளி மனம்" எனவும் அழைக்கப்படுகிறது.  நனவு மனம் எதையும் சீர்தூக்கி பார்க்கும் தன்மைக் கொண்டது. இங்கு  குறித்த விடயம் பற்றி முயற்சி   செய்யாது நினைவு கூறக்கூடியதாக இருக்கும். இது மனதின் மேற்பகுதியாகும். பொதுவாக நனவு மனமே "மனம்" என்று கூறப்படுகிறது.

முன்நனவு மனம் (Subconscious) :
   இது "நனவடி மனம்" எனவும் அழைக்கப்படுகின்றது. இதில் சேகரித்த விடயங்களை முயற்சி செய்து ஞபாகப்படுத்தலாம். இது தற்காலிகமாக செய்திகளை சேகரித்திரித்து வைக்கும் இடம் ஆகும். 

நனவிலி மனம் (Unconscious) :
   இது "ஆழ்மனம்" எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு ஒருவரால் அறிய முடியாத எண்ணங்கள், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஆசைகள், நோக்கங்கள், பாலியல் விருப்புக்கள் போன்றன ஒடுக்கப்படுகின்றன. இவை இவ்வாறு ஒடுக்கப்பட்டாலும் மனதிலிருந்து அழிந்து விடுவதில்லை. உளப்பகுப்பாய்வு என்பது நனவிலி மனதை பகுப்பாய்வு செய்வதையே குறிக்கும்.
  
    பொதுவாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உணர்ச்சிகளும், விருப்பங்களும் நனவிலியில் அழுந்திக் கிடப்பதாகவும்,  மேலெழுந்து ஆதிக்கம் செலுத்த முயலும் போது மனிதன் அதனை ஒடுக்க முயற்சிப்பதால் மனதில் போராட்டம் நிகழ்கிறது என்றும், அதனடிப்படையில் அவனின் நடத்தை அமைகிறது என்றும் சிக்மாண்ட் பிரைட் கூறுகிறார். இவ்வாறு ஒடுக்கப்படும் விடயங்களை அறியும் முறையே "உளப்பகுப்பாய்வு அணுகுமுறை " ஆகும்.

     நரம்பு நோய் போன்ற உள நோய்களுக்கு நனவிலி மனதி ஒடுக்கப்படும் ஆசைகளே காரணம் என பிரைட் கூறுகிறார். மேலும் நனவிலி மனதில் உள்ளவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் உள  நோய்க்கான காரணத்தை அறிய முடியும் எனவும் கூறுகிறார். இதற்காக இவர் பயன்படுத்திய நுட்பங்களில் "சுயாதீன இசைவு முறை" குறிப்பிடதக்கதாகும். இங்கு நோயாளியை பேசவைப்பதன் மூலம் நனவிலி மனதில் உள்ளவை வெளிக்கொணரப்படும். இதன் மூலம் உள  நோய்க்குரிய காரணங்களை அறிந்து அதனை குணப்படுத்த முடியும் என இவர் கூறுகிறார். 
  
     பிராய்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறையில் பாலியல் பற்றிய விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இவர் பாலியல் வளர்ச்சியினை  சில கட்டங்களாக பிரிக்கிறார். "நனவிலியின் தாக்கங்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்தவை" எனவும் "ஒருவனது பாலியல் ஆசைகள் அடக்கப்படும்போது நரம்பு நோய்கள் ஏற்பட இடமுண்டு" எனவும் கூறுகிறார்.

   உளப்பகுப்பாய்வு அணுகுமுறையானது உள நோய்க்கான நிவாரண முறையாக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டது. எனினும் பிற்காலத்தில்  இம்முறை தொடர்பான விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தகக்கத்தாகும்.  இதனடிப்படையில் பார்க்கும்போது சிக்மாண்ட் பிரைட் தன சொந்த அனுபவங்கள் மூலமே இந்த கோட்பாட்டை கட்டியெழுப்பியுள்ளதாகவும், சில கருத்துக்கள் நன்னடத்தைக்கு முரணானது என்றும் கூறப்படுகின்றன. 
    
     பிராய்டின் மாணவர்களான கார்ல் யுங் (Carl Jung), அல்பிரட் அட்லெர்   (Alfred Adler) ஆகியோரும்கூட இவரின் கருத்துக்களை முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கார்ல் பெப்பர் (Carl Popper) தனது பொய்ப்பித்தல் கோட்பாட்டில் "பிராய்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறையை விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது" என கூறியுள்ளார். 
  
  தொழிநுட்ப முன்னேற்றம் இல்லாத காலப்பகுதியில் இவர் முன்வைத்த உளப்பகுப்பாய்வு தொடர்பான கருத்துக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படாதபோதும்  இவரது கருத்துக்களில்  பொதிந்துள்ள பொதுவான விடயங்கள் மற்றும் உளச்சிகிச்சையின்போது உண்டாகும் உணர்வுபூர்வமான அசைவுகளை இவர் விளக்கிய விதம் போன்ற உளவியல் உலகுக்கு அவர் விட்டுச்சென்ற கொடை என்றே  கூறலாம். 


உசாத்துணை 

01. தூரன்.பெ, (1968), "மனமும் அதன் விளக்கமும்", சுதந்திர நிலைய வெளியீடு
02. பெனடிக்ற் பாலன்.யோ, (1996), "கல்வி உளவியல் அடிப்படைகள்", த்வானி, சென்னை - 600 028.
03. (ஆய்வறிக்கை) ரியால்.ஏ.எல்.எம், "சிக்மாண்ட் பிரொய்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறை"

M.M.Fathima Raseefa
University of Colombo





     





No comments:

Post a Comment