Saturday, 22 June 2019

உளவளத்துணையில் நடத்தைவாத அணுகுமுறை

நடத்தைவாத அணுகுமுறை 
(Behavioral Approach)

              உளவியல் என்பது ஒரு பரந்த துறையாகும். அதில் உளவளத்துணை ஓர் அங்கமாக காணப்படுகிறது. உளவளத்துணையானது "ஆற்றுப்படுத்தல், வழிகாட்டலும் ஆலோசனையும்" போன்ற பதங்களாலும் அழைக்கப்படுகின்றது. பிரச்சினையுடன் வருபவரை மதித்து ஏற்று, நம்பிக்கையூட்டி, தம்மைத் தாமே உணரவைத்து பிரச்சினையை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தல் உளவளத்துணை எனப்படுகின்றது. உளவளத்துணையில் பல்வேறு அணுகுமுறைகள் காணப்படுகின்றன. அவற்றில் நடத்தைவாத அணுகுமுறையும் ஒன்றாகும். 

       உளவியல் ஆராய்ச்சிக்கான முதலாவது ஆய்வுக்கூடத்தை நிறுவியவரான   வில்ஹம் வூண்ட் முன்வைத்த அகநோக்குமுறைக்கு எதிராக முன்வைக்கப்பட்டதே இவ்வணுகுமுறையாகும். இதனை அறிமுகம் செய்தவர் J.P.வாட்சன் ஆவார். மனித நடத்தையான தூண்டலுக்கும் துலங்களுக்குமான தொடர்பு பற்றியதாக இவ்வணுகுமுறை காணப்படுகிறது. இதனை   "S.R.Theory" எனவும் அழைக்க முடியும். மேலும் பவ்லோ, தோண்டைக் போன்றவர்களும் இதனை வளர்த்துள்ளனர்.

   இங்கு மனித நடத்தையின் அடிப்படையான தூண்டல் - துலங்கலை கற்றலினால் மாற்றி அமைக்க முடியும் என  கூறப்படுகின்றது. அந்தவகையில் தூண்டல் அதிகரிக்க கற்றல் அதிகரிப்பதுடன் பிழையான கற்றலை திருத்தி அமைப்பதன் மூலம் நடத்தையை சீர்படுத்த முடியும். போலச்செய்தல் மூலம் நடத்தைகள்  கற்றுக்கொள்ளப்படுவதுடன் மீள் வலியுறுத்தல் மூலம் நடத்தைகளில் செல்வாக்கு செலுத்தவும் முடியும்.  இன்று பாடசாலைகளில் மாணவர்களுக்கு பரிசளித்தல் மற்றும் தண்டனை அளித்தல் மூலம் கற்பித்தல் நுட்பமுறையொன்றாக இக்கோட்பாடு பிரயோகிக்கப்படுகிறது.

  நடத்தைவாத அணுகணுகுமுறையின்படி கீழே குறிப்பிடும் அமைப்பில் ஒருவரின் நடத்தையை திருத்தி அமைக்க முடியும்.
01. இல்லாத நடத்தையை உருவாக்குதல்.
02. இருக்கின்ற நடத்தைகளை இல்லாமல் செய்தல்.
03. இருக்கின்ற நடத்தையை மேலும் முன்னேற்றுதல்.
04. பொருத்தமற்ற நடத்தைகளை மாற்றியமைத்தல்.

   மனித  மனநிலையை வெளிப்படையாக தெரியும் நடத்தை மூலமே புரிந்துக்கொள்ள முடியும் என்பதால் "மனித நடத்தையை அறிய மனம் பற்றிய புரிந்தணர்வு அவசியம்"  கருத்து நடத்தையியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனடிப்படையில் சிக்மண்ட் பிராய்டின் "நனவிலி மனம்" பற்றிய கருத்துக்களும் இங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றே கூறலாம்.
            இவ்வணுகுமுறையிலிருந்தே நடத்தை மாற்ற சிகிச்சை முறைகள், சமூகத்திலிருந்து கற்றல் தொடர்பான கோட்பாடுகள் போன்றன  தோன்றின. இதனடிப்படையில் நடத்தை மாற்ற சிகிச்சைகளாக  "Applied Behavior Therapy", "Cognitive Behavior Therapy ", "Rational Emotive Behavior Therapy" போன்றவற்றை குறிப்பிட முடியும்.

இந்த நடத்தைவாத அணுகுமுறையானது ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அது தொடர்பான விமர்சனங்கள் எழாமல் இல்லை. அதனடிப்படையில் பார்கும்போது குறித்த நபர் தன் மனதிலிருப்பவற்றை மறைத்து வெளிதோற்றத்தில் போலியாக நடிக்க முடியும் எனவும் மனதில் உணர்பவை கண்களில் இருந்து மறைக்கப்படுகின்றன  எனவும்  கூறப்படுகின்றதன.  

 எவ்வாறிருப்பினும்  நடத்தைவாத அணுகுமுறையானது உளவியல் உலகில்  ஓர் திருப்புமுனையாக அமைந்தது என்றால் மிகையாகாது. 


  உசாத்துணை 

01.நௌபர்.யூ.எல்.எம் (மொழிபெயர்ப்பு),  "உளவியல் சார் உளவளத்துணை அணுகுமுறை", நிறுவன வெளியீடு, இலங்கை. 
02. பெனடிக்ற் பாலன்.யோ, (1996), "கல்வி உளவியல் அடிப்படைகள்", த்வானி வெளியீடு, சென்னை- 600028.
03. (ஆய்வறிக்கை) மாஹிர்.ஐ.எல்.எம், "வொட்சனின் உளவியல் சார் நடத்தைவாதம் உடல் பிரச்சினைக்கான தீர்வில் சடவாத பௌதீக  அதீதத்தினை நோக்கி நகர்கிறது." 

M.M.Fathima Raseefa
Faculty of Education
University of Colombo
    


No comments:

Post a Comment